Search

Wednesday, May 28, 2014

இணைய வங்கிப் பாவனையாளர்கள் அவதானமாக செயற்படுங்கள்: பொலிஸ் அறிவுறுத்தல்!


இணையக் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 
குறிப்பாக, இணையத்தின் ஊடாக வங்கி சேவைகளைப் பயன்படுத்துவோர் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறும், இணையப் பாவனைக்கென தனியான சிம் அட்டையினை பயன்படுத்துமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இணைய வங்கிச் சேவைகளை பயன்படுத்தும் சந்தர்ப்பங்களில் குறித்த இணையத்தளங்களின் உண்மைத் தன்மையினை இனங்காணுவது அவசியம். வங்கிகளின் இணையத்தளங்கள் என சில போலியான இணையத்தள முகவரிகள் மின்னஞ்சல் மூலம் கிடைக்கப்பெறலாம் என அவர் எச்சரித்துள்ளார்.

வங்கி கணக்கு விபரங்கள், கடவுச்சொல் விபரங்கள், மற்றும் தனிப்பட்ட விபரங்களை கோரி வரும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க வேண்டாம். குறித்த வங்கிகளின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் வங்கி சேவை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.

இணைய குற்றங்களை கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டுள்ள புலனாய்வு துறையினரின் சிறப்புப் பிரிவிற்கு, சமூக வலைத்தளங்கள் தொடர்பில் 235 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இந்த முறைப்பாடுகளில் இணைய வங்கி தொடர்பில் 9 முறைப்பாடுகளும், மின்னஞ்சல் தொடர்பாக 34 முறைப்பாடுகளும் அடங்குவதாக அஜித் ரோஹண மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment