Search

Friday, June 17, 2011

ஜேர்மன் அதிபருக்கே ஆப்பு வைத்த ஈரான்

பேர்லின், ஜேர்மனி: இந்தியாவுக்கு செல்ல விமானம் ஏறிய ஜேர்மன் அதிபருக்கு, வானில் நடைபெற்ற ஒரு அசம்பாவிதம், ‘திக்திக்’ நிமிடங்களை ஏற்படுத்தியது! ஒரு நாட்டின் அதிபரின் உயிருக்கே ஆபத்தான விபரீத விளையாட்டு அது!

கடந்த திங்கட்கிழமை இரவு இந்தியா செல்ல விமானமேறிய ஜேர்மன் அதிபர் ஆன்ஜெலா மேர்க்கல், தனது பயணம் விபரீதமான ஒன்றாக அமையும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். விமானம் புறப்படும்போது, எல்லாமே சரியாகத்தான் இருந்தன. அது வழமையான பயணிகள் விமானமல்ல என்பதால், விசேட அனுமதிகள் பெறப்பட்டிருந்தன.

இங்கு விசேட அனுமதிகள் என்பதில், வழமையான ரூட்டீனில் செல்லாத விமானத்துக்கு அதன் பாதையிலுள்ள அனைத்து நாடுகளிடமும் இருந்து முன் அனுமதி பெறுவதும் அடங்கும். அந்தந்த நாட்டு வான் எல்லைகளின் ஊடாகப் பறப்பதற்கு இந்த அனுமதி தேவை.

ஜேர்மனியிலிருந்து புறப்பட்ட விமானம், ஜேர்மனிக்கு மேலாகப் பறந்து, ஜேர்மன் வான் எல்லையைக் கடந்தது. அப்படியே துருக்கி வான் எல்லைக்குள் பிரவேசித்தது. அதுவரை சிக்கல் ஏதுமில்லை. துருக்கியின் வான் எல்லையைக் கடக்கவேண்டிய நேரத்தில் விமானி, அடுத்து பிரவேசிக்கவுள்ள நாட்டின் எல்லை ஈரானின் வான் எல்லை என்பதால், ஈரான் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தைத் தொடர்பு கொண்டார்.
அப்போதுதான் தொடங்கியது விபரீதம்.
ஈரானிய தரைக்கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து விமானிக்கு வந்த அறிவித்தல்-

“எங்கள் வான் எல்லையில் பறப்பதற்கு உங்கள் விமானத்துக்கு அனுமதி இல்லை. மீறி எமது நாட்டு வான் எல்லைக்குள் விமானம் வந்தால், சுட்டு வீழ்த்தப்படும்!”

உடனே விமானத்துக்குள் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்துக்குள் இருந்தே ஜேர்மனியைத் தொடர்புகொண்டு, நிலைமை பற்றிக் கூறப்பட்டது. இது நடைபெற்றபோது, ஜேர்மனியில் திங்கட்கிழைமை நள்ளிரவு. ஜேர்மன் வெளிவிவகார அமைச்சு, அந்த நேரத்திலும் ஈரானிய வெளிவிவகார அமைச்சைத் தொடர்பு கொள்ளும் முயற்சிகளில் இறங்கியது.இவையெல்லாம் நடந்துகொண்டிருந்த நேரத்தில், விமானம் ஈரானிய வான் எல்லையை நெருங்கிவிட்டது.

அடுத்த 5 நிமிடங்களில் விமானம் ஈரானிய எல்லைக்குள் பிரவேசிக்க வேண்டும் என்ற நிலையில்கூட அனுமதி கிடைத்தபாடில்லை.உடனடியாக துருக்கி தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தைத் தொடர்புகொண்ட விமானி, விமானத்தை துருக்கி வான்பரப்புக்குள் வட்டமடிக்க அனுமதி கேட்டார். உடனடியாக அந்த அனுமதி கிடைத்தது.

மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பறந்துகொண்டிருந்த விமானம், வடக்குத் திசையில் 135 டிகிரி திருப்பப்பட்டு, துருக்கியின் வான்பரப்புக்குள்ளேயே நின்று கொண்டது. ஈரானிய அனுமதி எந்த நிமிடமும் வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில், கிட்டத்தட்ட 275 கி.மீ பரப்பளவுக்குள் வட்டமடிக்கத் தொடங்கியது.நேரம் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், அனுமதி வந்தபாடில்லை.

ஜேர்மன் வெளிவிவகார அமைச்சு தொடர்புகொண்ட ஈரானிய அமைச்சுகள் ஏதும் சரியான பதிலைக் கூறுவதாக இல்லை. அதையடுத்து ஜேர்மன் அரசு, துருக்கியைத் தொடர்பு கொண்டது. துருக்கி அரசை, ஈரானிய அரசுடன் பேச்சுக்களைத் தொடங்கச் சொன்னது.விமானம், துருக்கி வான்பரப்பில 2 மணிநேரமாக வட்டமடித்துக் கொண்டிருந்த நிலையில் விமானி, மற்றொரு சிக்கல் ஏற்படப்போவது பற்றி எச்சரிக்கை செய்தார். அது, விமானத்தில் எரிபொருள் வேகமாகக் குறைந்துகொண்டு வரும் அபாயம்!ஜேர்மனியிலிருந்து இந்தியாவரை செல்லத் திட்டமிட்ட நேரத்தைவிட விமானம் 2 மணிநேரம் அதிகமாகவே துருக்கி வான்பரப்பில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றது. ஒரிஜினலாகத் திட்டமிடப்பட்டதைவிட, அதிக எரிபொருள் செலவாகிக்கொண்டிருக்கின்றது.இன்னமும் எவ்வளவு நேரம் வானில் வட்டமடித்துக் கொண்டிருக்க வேண்டுமோ தெரியாது என்ற நிலை.

இப்படியான நேரத்தில் விமானிகள் செய்யக்கூடியது ஒரேயொரு காரியம்தான். அது, அருகிலுள்ள விமான நிலையம் ஒன்றில் தரையிறங்க அனுமதி கோருவது. ஜேர்மன் அதிபரை ஏற்றிச்சென்ற விமானத்தின் விமானி செய்ததும் அதைத்தான்.துருக்கியின் அங்காரா விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கோரினார் அவர்.அங்காரா விமான நிலையத்திலிருந்து உடனடியான அனுமதி கிடைத்தது. அந்தத் தகவலை விமானத்திலிருந்த ஜேர்மன் அதிபருக்குத் தெரிவித்தார் விமானி. ஜேர்மன் அதிபரும் விமானத்தை அங்காரா விமான நிலையத்தை நோக்கிச் செலுத்துமாறு உத்தரவிட்டார்.இதெல்லாம் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் ஆஸ்திரேலிய டூரில் இருந்தார்.

அவருக்கும் விஷயம் தெரிவிக்கப்பட, அவரும் துருக்கியைத் தொடர்பு கொண்டார். “ஈரானிய அரசு அனுமதி வழங்காவிட்டால், பின்விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதை ஈரானிய அரசிடம் நீங்களே தெரிவியுங்கள்” என்று துருக்கி அரசிடம், அவர் கடுமையாகத் தெரிவித்தார்.விமானம் அங்காரா விமான நிலையத்தை நோக்கித் திசை திருப்பப்படும் நேரத்தில், ஈரானிய தரைக்கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து விமானிக்கு மற்றொரு தகவல் வந்து சேர்ந்தது.

“ஈரானிய வான்பரப்பில் பறப்பதற்கு உங்கள் விமானத்துக்கு அனுமதி வழங்கப்படுகின்றது. வெல்கம் டு ஈரான்”

அந்த இடத்திலிருந்து விமானத்தை இந்தியாவரை கொண்டுசெல்ல போதியளவு எரிபொருள் விமானத்தில் இருந்ததை உறுதி செய்துகொண்ட விமானி, விமானத்தை கிழக்கு நோக்கித் திருப்பி, ஈரானிய எல்லைக்குள் பிரவேசித்தார். ஈரானின் வான்பரப்பின் ஊடாக, விமானம் இந்தியாவை நோக்கிப் பறக்கத் தொடங்கியது.செவ்வாய்க்கிழமை காலை, விமானம் 10.45 மணிக்கு டில்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானம் எதிர்பார்க்கப்பட்ட நேரத்திலிருந்து 2 மணி நேரத் தாமதம் இது!

ஜேர்மன் அதிபர், இந்தியாவில் வந்திறங்கியவுடன் பிரதமர் மன்மோகன் சிங்குடன் கலந்து கொள்ளவேண்டிய நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விமானம் தாமதமாக வந்ததால், அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.ஈரான் அதிரடியான காரியங்களைச் செய்வதில் கில்லாடிதான். ஆனால், ஜேர்மனி போன்றதொரு பலமான நாட்டின் ஜனாதிபதியோடு விளையாடும் அளவுக்குப் போயிருப்பதுதான் ஆச்சரியம்.

அடுத்துவரும் சில தினங்களில், ஜேர்மனி, ஈரானுக்கு ராஜதந்திர இடைஞ்சல்களைக் கொடுக்கப்போகின்றது, இருந்து பாருங்கள்!

-http://www.newjaffna.com-